சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.17.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
ஜமாலியா லேன் பகுதியில் 1976ம் ஆண்டில் 326 சதுர அடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட 128 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் கூடிய 130 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்புகளும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் 413 சதுர அடியில் அமைய உள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி, குடிநீர் வசதியும், ஒவ்வொரு பிளாக்கிலும் மின் தூக்கி (Lift) மற்றும் மின்னாக்கி (Generator) வசதிகள், மழைநீர் கால்வாய்கள் மற்றும் கான்கிரிட் சாலைகள், தெரு விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த 128 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 2 குடியிருப்புகள், அங்கன்வாடி மையத்திற்கு (ICDS) வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து மறுகுடியமர்வு செய்யவுள்ள 128 குடியிருப்புதாரர்களுக்கு ஏற்கெனவே தலா ரூ.8000 கருணைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.16,000 வீதம், மொத்தம் 20.48 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் குடியிருப்புதாரர்களுக்கு வழங்கினார்.