திருமலை: நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் திருமணம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதைதொடர்ந்து நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு கோயிலுக்கு வெளியே காலணிகள் அணிந்தபடி, கோயில் முன்பும், 4 மாட வீதிகளிலும் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவரும் பக்தர்கள் யாராக இருந்தாலும் தேவஸ்தான சம்பிரதாயங்கள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கிய பிரமுகர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டும். நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்த பின்னர் காலணி அணிந்து போட்டோஷூட் எடுத்திருப்பது தேவஸ்தான சம்பிரதாயங்களுக்கு எதிரானது. எனவே இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும், அவ்வாறு நடந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறங்காவலர் குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேவஸ்தானம் சார்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.விக்னேஷ் சிவன் மன்னிப்பு நரசிம்ம கிஷோர் மேலும் கூறுகையில், ‘நடிகர் விக்னேஷ் சிவன் இதுதொடர்பாக தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக நாங்கள் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் கூட்டம் குறைந்த பின்னர் கோயில் முன்பு போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், அவசரத்தில் வந்தபோது காலணிகள் அணிந்திருந்ததை உணரவில்லை. அவமரியாதை செய்ய வேண்டிய எண்ணம் இல்லை. இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார் என்றார்.