மும்பை: கோவா கப்பல் போதை பொருள் பார்ட்டியில் கைதான ஆர்யன்கான், விசாரணை அதிகாரியிடம் ஐயா, நீங்கள் எனக்கு எதிராக மிகப்பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி இரவு கோவா நோக்கி சென்ற கப்பலில் போதை ெபாருள் பார்ட்டி நடப்பதாக போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் சென்றது. அதையடுத்து அந்தக் கப்பலில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா உள்ளிட்ட 20 பேரை கைது செய்தது. இவ்வழக்கில் அதே ஆண்டு அக்டோபர் 28ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்பதால், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்தது. இந்நிலையில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சஞ்சய் சிங் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ஆர்யன் கானை காவலில் எடுத்து விசாரித்த போது, அவர் என்னிடம், ‘என்னை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் போல நடத்துகின்றீர்கள் என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானவை அல்லவா?. எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இத்தனை நாட்களாக என்னை சிறையில் அடைக்கலாமா? ஐயா, நீங்கள் எனக்கு எதிராக மிகப்பெரிய தவறு செய்துள்ளீர்கள்! என்னுடைய நற்பெயரைக் கெடுத்துவிட்டீர்கள்’ என்றார். மற்றபடி குற்றம்சாட்டப்பட்ட சிலருடன் ஆர்யன்கான் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அவருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார்.