சென்னை ராயப்பேட்டை பகுதியில் ரூ. 20 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அது ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு நபர்கள் நின்றுக் கொண்டிருப்பதாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலைக் காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயப்பேட்டை போலீஸார், அங்கிருந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையினுள் ரூ. 20 லட்சம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது ஹவாலா பணமா அல்லது வேறு ஏதேனும் பணமா என்பது குறித்து ராயப்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM