திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்தில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் நிறுவன
தொழிலாளி. மனைவி வித்யஜோதி. இவர்களது மகன் மோகித் (7), மகள் விதர்சனா (4). சிறுவயதிலேயே அண்ணன், தங்கை இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர் கூறியதாவது: இரவு நேரங்களில் மோகித் அதிக அளவில் சிறுநீர் கழித்ததால், சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தோம்.
அதில் ரகம் 1 எனப்படும் சர்க்கரை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதேபோல எங்களின் மகள் விதர்சனாவை பரிசோதித்தபோது, ஒன்றரை வயதில் இருந்தே அவருக்கும் சர்க்கரை நோய் இருந்தது தெரியவந்தது. தற்போது இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்தி வருகிறோம்.
அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால், தனியார் மருத்துவமனையை நாடினோம். இதனால் இருவருக்கும் தலா ரூ.6,000 வீதம் மாதம் ரூ.12,000 வரை செலவாகிறது. இருவரும், எஸ்.பெரியபாளையம் அரசுப் பள்ளியில் படித்து வருவதால், நேரத்துக்கு சென்று ஊசி செலுத்த வேண்டி நிலை உள்ளது.
பனியன் நிறுவனத்தில் கிடைக்கின்ற சொற்ப சம்பளத்தைக் கொண்டு, இன்சுலின் ஊசி வாங்கக்கூட காசில்லாமல் தவித்து வருகிறோம். எங்கள் மகன், மகளுக்கு தேவையான இன்சுலின் ஊசி, மருந்துகளை எந்த தடையும் இல்லாமல், அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம், என்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்படி, இரு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்துவர பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளோம். அவர்களை பரிசோதித்த பிறகு, தேவையான மருந்துகளை முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். திருப்பூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்.