திருப்பூர்: சிவன்மலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என சிவன்மலை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில், கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கிய கோயிலாகும். வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு உள்ளது. அது, இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி, அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவது வழக்கம். அதன்படி, அவ்வப்போது உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விவரத்தைக் கூறினால், மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. பக்தரின் கனவில் வரும் மறு உத்தரவு வரை, பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். அதையொட்டி, சமூகத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களிடம் காலங்காலமாக உள்ள ஐதீகம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த சிவன்மலை சுப்பிரமணியரை தரிசிக்க, திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வர். தற்போது காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை தேடி வந்து இங்கு தனியாகவும் குடும்பத்துடனும் தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன்மலையில் சாமி தரிசனம் செய்ய சமீப காலமாக குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பு கோயிலின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான துண்டறிக்கை போன்று கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ’துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெகின்ஸ் உடையில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதியில்லை’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் விமலா இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, “கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சொல்லியதாகக் கூறி, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் சொல்லி, காவலாளி ஓட்டி உள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கவனத்துக்கு கொண்டு வராமல் இதனை செய்துள்ளார். தற்போது இதனை அகற்றிவிட்டோம். அரசு எதுவும் சொல்லாமல், இனி இதுபோன்று செய்யக்கூடாது” என எச்சரித்துள்ளோம் என்றனர்.