நெல்லை அருகே வேலையில்லாமல் ஊருக்குள் சுற்றி வந்த என்ஜீனியரிங் பட்டதாரி ஒருவன், வீடுகளின் சுவர் ஏறி குதித்து பெண்களை ஆபாசமாக படம் எடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டான். அவனது செல்போனில் 50 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை அடுத்த பாளையங்கோட்டை பெருமாள் புரத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஜன்னல் வழியாக ஒருவன் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளான். இதனை கண்டு அதிர்ந்து போய் அந்த பெண் கூச்சலிட்டதும், வீட்டில் இருந்து அருகில் உள்ள பூங்காவிற்குள் சென்று பதுங்கி கொண்டான்.
அப்பகுதி மக்கள் திரண்டு சென்று தீவிரமாக தேடி பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்து ஊர் கூடி உரித்தனர்
அந்த பகுதி மக்கள் அவனிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் குளியல் காட்சிகள், உடைமாற்றும் ஆபாச படங்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து ஆவேசத்தில் அவனை அடித்து சட்டையை கிழித்தனர்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரிடம், அந்த வீடியோ வில்லனை ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவன், ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்த பால் ராபின்சன் என்பதும், அவனது மனைவி ஆசிரியை என்பதும் தெரியவந்தது.
என்ஜீனியரிங் பட்டதாரியான அவன் சென்னையில் பார்த்து வந்த வேலை கொரோனா ஊரடங்கால் பறிபோனதால், மனைவியின் வருமானத்தில் ஊதாரியாக சுற்றிக் கொண்டு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மறைந்திருந்து ஆபாசமாக படம் பிடித்து வந்தது தெரியவந்தது. அவனது செல்போனில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இவன் பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட காலனி பகுதியில் மட்டும் அடிக்கடி சென்று வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களை ஜன்னல் வழியாக எடுத்து வைத்திருப்பதாக கூறும் போலீசார், பால் ராபின்சன் இதுபோன்று பல நாட்கள் பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பணத்துக்காக இந்த வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளானா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
அவனது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதிலுள்ள காட்சிகளை வைத்து பால்ராபிண்சன் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்தது அதை வெளியிடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வீட்டில் காற்றுக்காக ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்கும் பெண்கள், உடைமாற்றும் போது மிகுந்த கவனமுடன் இருக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.