சென்னை: நபார்டு வங்கி கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.32,443 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.
இதுகுறித்து, நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் டி.வெங்கடகிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நபார்டு வங்கி தமிழகத்துக்கு வழங்கும் நிதியுதவி கடந்த 2021-22-ம் ஆண்டில் ரூ.27,135 கோடியிலிருந்து ரூ.32,443 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய, நீண்ட கால விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், முன்னுரிமைத் துறைக்கான மொத்த மறுநிதியளிப்பு ரூ.23,167 கோடியில், கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.9,475 கோடியும், வணிக வங்கிகளுக்கு ரூ.5,746 கோடியும், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்குரூ.5,037 கோடியும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி குறு நிறுவனங்களுக்கு ரூ.2,639 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு நேரடி மறுநிதி உதவியாக ரூ.2,830 கோடியில் புதிய வசதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மாநில அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு ரூ.4,364 கோடி வழங்கப்பட்டது.
மேலும், நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியின் கீழ், ரூ.1,500 கோடியும், மீன்விதைப் பண்ணைகள், மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீனவர்களுக்கான பயிற்சி மையங்கள் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.172 கோடியும் விடுவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் தொழில் வளர்ச்சி மையத்தில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூ.38 கோடியும், நுண்ணீர் பாசன நிதியின் கீழ்ரூ.182 கோடியும், சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, கிடங்கு உள்கட்டமைப்பு நிதியின்கீழ் ரூ.104 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி உதவிவழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வெங்கடகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.