முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சிவில் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை மக்களின் இறைமைக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கேட்டறிந்துள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
LOLC மற்றும் LB Finance ஊடாக இடம்பெற்ற வரி மோசடி மற்றும் மோசடியை மூடிமறைக்க அரசாங்கம் உதவிய சம்பவத்தையும் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களின் சொத்து விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
பதவி விலகிய பசில் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச கடந்த 9ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச தேசியப் பட்டியல் ஊடக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், நிதி அமைச்சராகவும் செயற்பட்டார்.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடந்த மாதம் 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதை தொடர்ந்து முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினரான முன்னணி வர்த்தகர்
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நிமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். விரைவில் அவர் முக்கிய அமைச்சு பதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.