நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்யும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களை தவறாக வழிநடத்தும்தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை வழங்குவது குறித்தும் அதில் வரயறுக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறும், உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர், சேவை வழங்குநர், விளம்பரதாரர் மற்றும் விளம்பர முகவர் ஆகியோரின் கடமைகள் பற்றியும் வழிகாடு நெறிமுறைகள் வரையறுக்கின்றன. “விளம்பரங்கள் வெளியிடப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவைக் கொண்டு வருவதன் மூலம் நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன, இதனால் நுகர்வோர் தவறான விவரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தல்களை விட உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும்.” என்று இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சு, தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் போன்ற அனைத்து தளங்களிலும் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளத்தில் போலியான மதிப்பாய்வுகளை தடுக்க தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.