தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நேற்றுமுன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய திருமணத்தை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு வருவது சிரமம் என்ற காரணத்தினால், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கள் திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தினர்.
திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று இருவரும் திருப்பதி சென்றனர். அங்கு இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி சர்ச்சையில் சிக்கியது. திருப்பதியில் சாமி தரிசனம் பின்பு புகைப்படம் எடுத்த போது நயன்தாரா காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
நடிகை நயன்தாரா மீது திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். புகைப்படம் எடுக்கும் அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலணியை அணிந்து இருந்ததை உணரவில்லை. கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை. எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என விக்னேஷ் சிவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.