திருமணத்திற்கு முதல்நாளே நேரில் வந்து நயன்தாராவை வாழ்த்திய குருநாதர்
ரசிகர்கள் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் நேற்று முன்தினம் இனிதே நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், அதிலும் குறிப்பாக இந்த நிகழ்வில் இயக்குனர் ஹரி தனது மனைவி ப்ரீத்தாவுடன் கலந்து கொண்டார்.
இயக்குனர் ஹரி தான் நயன்தாராவை தமிழில் தான் இயக்கிய ஐயா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அறிமுகப்படுத்திய குரு என்கிற விசுவாசத்தில் அவருக்கு நயன்தாரா சிறப்பு அழைப்பு அனுப்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதேசமயம் முதன்முறையாக மலையாளத்தில் நயன்தாராவை அறிமுகப்படுத்தியவர் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு. தான் இயக்கிய மனசினக்கரே என்கிற படத்தில் சில பல தடைகளை தாண்டித்தான் நயன்தாராவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் சத்யன் அந்திக்காடு. ஆனால் இந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டாரா, அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா என்கிற கேள்வியும் சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது.
காரணம் சத்யன் அந்திக்காடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் திருமணத்திற்கு முதல்நாளே சென்னை வந்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு நேரிலேயே சென்று நயன்தாராவை வாழ்த்தி ஆசீர்வதித்து உள்ளார். அதுமட்டுமல்ல மறுநாள் மகாபலிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விலும் அவர் கலந்துகொண்டதாக மலையாள திரையுலக வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.