திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் கோவளம் அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர் அப்புகுட்டன் (வயது 65). இவரது மனைவி சரசம்மா (61). இவர்களது இரண்டாவது மகன் ரெனீன்(35). நேற்று மாலை 4 மணி அளவில் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வரும் சரசம்மா தனக்கு ஒரு இளநீர் வேண்டும் என கணவனிடம் கேட்டுள்ளார்.
உடனே அவர் அருகிலுள்ள ஒரு தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக வீட்டின் மாடி மீது ஏறிச் சென்று இரும்பு கொக்கியை பயன்படுத்தி இளநீரை பறிக்க முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாரதவிதமாக மேலே சென்ற மின்கம்பி மீது இரும்பு கொக்கி மாட்டிக் கொண்டது.அதிக மின் அழுத்தம் இருந்ததால் அவரது உடம்பில் மின்சாரம் பாய்ந்து புகை வர ஆரம்பித்தது.இதை கண்ட மகன் அப்பாவை காப்பாற்ற முயற்சி செய்து உள்ளார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர் உடம்பில் இருந்தும் புகை வர ஆரம்பித்துள்ளது.வெளியிலிருந்து இதைக் கவனித்த ஒரு சிலர் ஓடிவந்து பார்த்தபோது இருவரும் உடல் கருகி மயங்கிய நிலையில் காணப்பட்டார்கள். உடனடியாக அவர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்துவிட்டு அவர்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவிக்காக இளநீர் பறிக்கச் சென்ற தந்தையும் ,மகனும் மின்சாரம் தாக்கி இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.