ஆன்லைன் கல்வி தொடர்பான ஆப்ஸ்கள் மீது பல புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து அவற்றுக்கு ஆப்பு வைக்கும் வகையில் மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைனில் கோடிங் தொடர்பான கல்வி முதல் அனைத்து கல்விகளையும் சொல்லி கொடுப்பதாக ஒருசில கல்வி ஆப்ஸ்கள் பெற்றோர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை கறந்து வருகின்றன.
9 வயது சிறுவன் தங்களிடம் கோடிங் கற்றுக்கொண்டு தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாக ஆடம்பரமான விளம்பரத்தை இந்த ஆப்ஸ்கள் செய்கின்றன. இந்த விளம்பரத்தை நம்பி நமது குழந்தைகளும் கோடிங் கற்றுக்கொண்டு கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆப்ஸ்களுக்கு அதிக பணத்தை கட்டி தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செலவு செய்கின்றனர்.
ரிசர்வ் வங்கி வட்டி உயர்வால் கலங்கி நிற்கும் அம்பானி, அதானி, டாடா.. ஏன்..?
ஆன்லைன் ஆப்ஸ்
ஆனால் விளம்பரம் செய்யப்பட்ட அப்படி ஒரு பையனே உலகில் இல்லை என்பது தான் உண்மை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ். எம்சிஏ போன்ற படிப்பை படித்தவர்கள் செய்யும் கோடிங்கை ஆறு மாத கோர்ஸ் படித்த 9 வயது சிறுவனால் எப்படி செய்ய முடியும்? இது சாத்தியமா? என்பதை பெற்றோர்கள் ஒரே ஒரு நிமிடம் யோசித்தால் கூட இந்த முறைகேட்டில் இருந்து தப்பித்து கொள்ளலாம்’ என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
போலி விளம்பரம்
போலி விளம்பரங்கள் மூலம் பெற்றோர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் இது போன்ற கல்வி ஆப்ஸ்களுக்கு மத்திய நுகர்வோர் துறை கட்டுப்பாடுகள் விதிக்க தற்போது முடிவு செய்துள்ளன. ஆன்லைன் ஆப்ஸ்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
மத்திய அரசின் குழு
மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘ஆன்லைன் ஆப்ஸ்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒரு குழு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இந்த குழு கல்வி ஆப்ஸ்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் என்றும் விரைவில் கல்வி ஆப்ஸ் நிறுவனங்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தவும் இந்த குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும் கல்வி ஆப்ஸ்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெற்றோர்
மத்திய அரசு நடவடிக்கை என்பது எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதுக்கு மீறி கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைப்படாமல் இருக்க வேண்டும் என்றும், அந்தந்த வயதில் அந்த கல்வியைக் அவர்கள் படித்தால் போதும் என்ற எண்ணத்தோடு இருந்தால் இந்த ஆப்ஸ்கள் இவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்காது என்பதுதான் உண்மை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கோடிங்
ஒருவேளை ஆன்லைன் கோடிங் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று விரும்பினால், குழந்தைகளும் ஆசைப்பட்டால், அதற்கு கூகுள் உள்பட பல நிறுவனங்கள் இலவசமாக கற்று கொடுக்கின்றது. அந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு தீனிபோட வேண்டுமே தவிர, லட்சக்கணக்கில் பணத்தை கட்டி ஆன்லைன் கோடிங் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
Consumer Affairs Ministry calls meeting to discuss complaints against edutech firms
Consumer Affairs Ministry calls meeting to discuss complaints against edutech firms | நடைமறைக்கு சாத்தியமில்லாத விளம்பரங்கள்: கல்வி ஆப்ஸ்களுக்கு ஆப்பு வைக்கும் அரசு!