நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்டில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் கலலரம் வெடித்தது.
பாஜக தலைவர்களான நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் அண்மையில் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் தலையிட்டு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு பூதாகரமானது. வளைகுடா நாடுகளின் எதிர்ப்பை அடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நவீன் ஜிண்டால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நபிகள் குறித்து தரக்குறைவாக கருத்து கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாடத்திலும், கண்டனப் பேரணியிலும் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, மகாராஷ்ட்ராவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நவி மும்பையில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர். இதனிடையே, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜார்க்கண்டில் கலவரம்
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசர் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் பெரும் கலவரம் வெடித்தது. குறிப்பாக, தலைநகர் ராஞ்சியில் போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த வந்த போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பல போலீஸார் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராஞ்சியில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாரும் வெளியே நடமாட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM