ஓஸ்லோ,
நார்வே நாட்டில் நடந்த நார்வே செஸ் போட்டி தொடரின் 9வது மற்றும் இறுதி சுற்று போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 23 வயது இளம் வீரர் ஆர்யன் தாரி ஆகியோர் இன்று விளையாடினர்.
இதில், திறமையாக விளையாடி போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்று 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்துள்ளார். கார்ல்சன் (16.5 புள்ளிகள்) மற்றும் அஜர்பைஜானின் ஷாக்ரியார் மமித்யாரவ் (15.5 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களை பிடித்து உள்ளனர்.
இந்த போட்டி தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன் தொடர்ந்து 4வது முறையாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 5வது முறையாகவும் நார்வே செஸ் போட்டி தொடருக்கான பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
எனினும், இந்த தொடரில் நடந்த போட்டி ஒன்றில் ஆனந்திடம், கார்ல்சன் தோல்வியுற்றார். மேக்சிம் வாச்சியர்-லக்ராவே (பிரான்ஸ்), வெஸ்லின் தொபலோவ் (பல்கேரியா) மற்றும் ஹாவோ வாங் (சீனா) ஆகிய 3 பேரை ஆனந்த் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றார்.