ஐ.ஐ.டி யில் படிப்பதற்காக எழுதக்கூடிய நுழைவுத் தேர்வான JEE அட்வான்ஸ்டு குறித்து கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா, நெடுஞ்செழியன் ஆகியோர் நடத்திய உரையாடலின் சிறு பகுதி இதோ…
1. முன்னர் JEE Advanced தேர்வுக்கான மாணவர்களை பெர்சன்டைல் அடிப்படையில் தேர்வு செய்துக்கொண்டிருந்தார்கள். தற்போது டாப் இரண்டரை லட்சம் மாணவர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஏன் இந்த வேறுபாடு?
“இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இடங்களை நிரப்புவதால்தான் இந்த மாற்றம். இதற்கு முன் பெர்சன்டைல் அடிப்படையில் இடங்கள் நிரப்பும் போது ஒரு குறிப்பிட்ட பெர்சன்டைலோடு நிறுத்திவிடுவார்கள். பெரிய அளவிற்கு இட ஒதுக்கீடு விதிமுறைகள் அப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.”
2. JEE முதற்கட்ட தேர்வு (Prelims) மாநில மொழிகளில் உள்ள போது, ஏன் அதற்கு அடுத்தக்கட்ட தேர்வான அட்வான்ஸ்டு வெறும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் உள்ளது?
“இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாநில அரசுகள் தேர்வாணையத்திற்கு இது குறித்து பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் அது இன்னும் அப்படியே தொடர்கிறது. பெரும்பாலான அளவில் மாணவர்கள் உள்ளே வருவதை தடுக்கத்தான் பார்க்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஐ.ஐ.டி யில் 15,000 மாணவர்களால்தான் நுழைய முடிகிறது. இதற்குக் கிட்டத்தட்ட 14 லட்சம் மாணவர்கள்வரை போட்டிப் போடுகிறார்கள்.
3. JEE அட்வான்ஸ்டிற்கான பேட்டர்ன் என்ன?
“இது யாருக்குமே தெரியாது. வருடா வருடம் இது மாறும். சொல்லப்போனால் எந்த கோச்சிங் சென்டருக்குமே ஐ.ஐ.டி பேட்டர்ன் தெரியாது. படிக்கும் போது மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும். கோச்சிங் சென்டர்களை ஒழிப்பதுதான் இந்த ஐ.ஐ.டி உடைய திட்டமே. ஒரு வருடம் ‘சரியான விடையைத் தேர்ந்தெடுக்க’ என்று இருக்கும். இன்னொரு வருடம் பெரிய அளவில் கட்டுரை எழுதுவது போல இருக்கும். இப்படி வருடா வருடம் தேர்வு முறை மாறிக்கொண்டே இருக்கும்.”
4. அப்போ JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கு எப்படிப் படிப்பது?
“படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டும். JEE அட்வான்ஸ்டு என்பது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கே சவால்தான். ஒரு நியூட்டன் விதியை படிக்கும் போது, அதை எந்தெந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள், வேறு என்ன விதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எல்லாரும் ஈர்ப்பான ஆசிரியர்களாக இருந்தார்கள். தற்போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மற்றும் பாடத்தின் மீதான அந்த ஈர்ப்பு பெருமளவில் குறைந்துவிட்டது.”
5. ஐ.ஐ.டி கலந்தாய்வு தேதி அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வோடு இணைந்து வருமா? அல்லது முன்னே பின்னே வருமா?
“பெரும்பாலும் முன்னே பின்னேதான் வரும். ஐ.ஐ.டி, என்.ஐ.டி கவுன்சிலிங்கில் மொத்தம் 750 ஆப்சன்கள்தான் இருக்கும். ஆனால் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் மொத்தம் 25 ஆயிரம் ஆப்சன்கள் இருக்கும். இதில் கிருஷ்ணா என்ற பத்து கல்லூரிகள் இருக்கும், வெங்கடேஸ்வரா என்றால் அதில் ஒரு பத்து கல்லூரிகள் இருக்கும். இது மாணவர்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கும். எனவேதான் நேரில் கலந்துக்கொள்ளும் முறையில் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.”