புதுடெல்லி: சர்ச்சை சாமியார் நித்யானந்தா, ஜீவசமாதி அடைந்தாரா, அவரது உடல் நிலை எப்படி இருக்கிறது என்று அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் அவரது சிலைகளை வைத்து நடத்தப்பட்ட பூஜையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கைலாசாவில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு உள்ளது. சமீபத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ‘நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. உடலில் எந்த உறுப்பிலும் பாதிப்பு இல்லை. எனக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை’ என்றார். இந்நிலையில் திடீரென அவரது உடல் நிலை பாதிக்கப்பட்ள்ளது, தற்போது குணமாகி விட்டது, நல்ல உடல்நிலையில் இருக்கிறார், விரைவில் மக்களிடம் பேசுவார் என்றும் தகவல்கள் வந்தன. ஆனாலும் நித்யானந்தா பேஸ்புக் பக்கத்தில் பேசவில்லை. பின்னர் மீண்டும் உடல்நிலை மோசமானதாக கூறப்பட்டது. அவர் சமாதி நிலையில் இருக்கிறார். உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு சிகிச்சைக்கு வந்து விட்டார் என்றும் செய்திகள் வந்தன. அவரது உண்மையான உடல்நிலை என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.இந்நிலையில்தான் தற்போது கைலாசாவில் நடத்தப்பட்ட வழிபாடு ஒன்று மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள நித்யனந்தேஸ்வர இந்து கோயில் என்ற புதிய கோயிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக நித்தியானந்தாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.