சஹரன்பூர்: நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தை அடக்க, மாநில அரசு தனது சமீபத்திய ‘புல்டோசர்’ நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, உத்தரபிரதேசத்தின் கான்பூர் மற்றும் சஹரன்பூர் என இரண்டு நகரங்களில் கட்டிடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுவருகின்றன. சஹரன்பூரில் நேற்றுமுதல் கலவரம் அரங்கேறிவருகிறது. வன்முறையை தொடங்க காரணமாக கருதப்படும், முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் என்ற இருவரின் வீடுகளையும் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளியுள்ளனர்.
சஹரன்பூர் எஸ்எஸ்பி ஆகாஷ் தோமர், புல்டோசர் நடவடிக்கை குறித்து பேசுகையில், “இருவரின் வீடுகளும் சட்டவிரோத கட்டுமானங்களாக கண்டறியப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இதேபோன்ற நடவடிக்கை கான்பூரிலும் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கான்பூரின் பெகான் கஞ்ச் பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் மாஸ்டர் மைண்ட் எனச் சொல்லப்படும் தொழிலதிபர் முகமது இஷ்தியாக் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தை மாவட்ட அதிகாரிகள் புல்டோசரால் இடித்தனர். இவை போன்றே, ஹத்ராஸ், பிரயாக்ராஜ், மொராதாபாத், ஃபெரோசாபாத் மற்றும் அம்பேத்கர்நகர் என உத்தரப்பிரதேசத்தில் வன்முறை பரவிய இடங்களில் புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு. மேலும், கலவரம் தொடர்பாக 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியது. கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துகளை தெரிவிக்கும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது.
இந்தப் பின்புலத்தில், நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெற்றுப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின பதற்றமிக்க பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
ராஞ்சியில் 2 பேர் உயிரிழப்பு: ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரகள் கற்களால் வீசி கலரத்தில் ஈடுபட்டபோது, போஒலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் சிலர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் போலீஸார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தராகண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, ராஞ்சி உள்பட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் செய்வது என்ன?
நூபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வலியுறுத்தல்களுடன் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், நாடு முழுவதும் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கலவரங்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஆலோசனைகளை மாநில அரசுகளுக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், காவலர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டோடு இருக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல்களை மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கிறார். குஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.