கொல்கத்தா: நூபுர் சர்மா சர்ச்சை எதிரொலியாக ஹவுராவில் நடந்த கலவர சம்பவங்களுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதையடுத்து நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியது. கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துகளை தெரிவிக்கும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது.
இந்த நிலையில், நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது.
இது குறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இதற்கு முன்னரும் இதனைக் கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள்.
இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று காட்டமாக கூறியுள்ளார்.
வன்முறை காரணமாக உலுபெரியா பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை இந்தத் தடை அங்கு நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, ஹவுராவில் கலவரம் தொடர்பாக 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.