ஓசூர்: பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டு ஆய்வுப்பணி கோட்டாட்சியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி கூறியதாவது: “பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படவேண்டும்.
பள்ளி பேருந்து நின்ற பிறகு உதவியாளர் பேருந்து கதவை திறந்து குழந்தைகளை பாதுகாப்புடன் இறங்குவதற்கு உதவி செய்வதுடன், பாதுகாப்புடன் பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும். பள்ளி பேருந்து ஓட்டுநர்களும், உதவியாளர்களும் தங்களுடைய பெயர் மற்றும் பள்ளி பெயர் அச்சிடப்பட்ட பேட்ஜ்களை அணிய வேண்டும்.” என்று தேன்மொழி கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து கோட்டாட்சியர் தேன்மொழி பள்ளி பேருந்துகளின் ஆவணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள அவசர கதவு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் ஆகியார் உடனிருந்தனர்.
மேலும், தீயணைப்பு துறை சார்பில் பள்ளி பேருந்துகளில் தீ விபத்து ஏற்படும் போது பாதுகாப்புடன் தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மது தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு குழுவினர் பங்கேற்றனர். இந்த தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள், பள்ளி வாகன ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பள்ளி வாகன ஆய்வில் பங்கேற்ற 625 வாகனங்களில் முதல்கட்டமாக 150பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தினமும் 150 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி கூறினார்.