‘விக்ரம்’ படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வீடியோ மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘விகரம்’ படம், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகிற படம் என்பதாலும், பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்க முதலே எதிர்பார்ப்பு எகிறிவந்தது. அதற்கேற்றார்போல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருந்தது.
படத்திற்கான புரமோஷன் ஹைப் ஏற்றியநிலையில், கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ படம் ஒருவாரத்திலேயே 250 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது. பல திரையரங்குகளில் தற்போதும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஆடம்பர கார் ஒன்றையும், அவரின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இருசக்கர வாகனத்தையும் பரிசளித்திருந்தார். அதேபோல் கடைசி சில நிமிடங்களில் வந்து மிரட்டிய சூர்யாவுக்கு, தனது விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றினையும் பரிசளித்திருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில், படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கு, தனது நன்றியை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழர்கள் இல்லாத நாடு இல்லை, தேன் மதுர தமிழ் ஓசை ஒலிக்காத ஊர் இல்லை என்னும் அளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும், உலக தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த பிரம்மாண்டமான வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த சினிமாக்களின் மூலம் தொடர்ந்து உங்களை எண்டெர்டெயின் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை நான் அறிவேன். அதைச் செய்வேன். உயிரே, உறவே, தமிழே, நன்றி” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thank you
With love ,
Kamal Haasan @ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @APIfilms @PrimeMediaUS @Hamsinient @DmyCreation @RedGiantMovies_@actor_nithiin @anbariv pic.twitter.com/1eVcpbateJ— Raaj Kamal Films International (@RKFI) June 11, 2022