டெல்லி: மதுபானம், புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக அவற்றை அடையாளப்படுத்தும் விளம்பரங்களுக்கும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் மதுபானங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு தடை உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட பிராண்ட் பெயரை நினைவுபடுத்தும் வகையில் சோடா, பான் மசாலா, தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வளம் வருகின்றன. இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில், மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள், தவறான தகவல்கள் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்வதாக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விளம்பரங்கள் சரியான தகவல் பெரும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறுவதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்களுக்கு உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், விளம்பரத்திற்கு ஒப்புதல் அளித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே தவறுகளை தொடர்ந்து செய்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்றும் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்திருக்கிறது.