மக்கள் நலனே அரசின் தலையாய கடமை – குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நவ்சாரி: மக்கள் நலனே அரசின் தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

நவ்சாரி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான குத்வேலில் நடந்த விழாவில் ரூ.3,050 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் பேசியதாவது:

இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதால் குஜராத் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்களால் தெற்கு குஜராத்தின் சூரத், நவ்சாரி, வல்சாத், தபி மாவட்டங்கள் அபரித வளர்ச்சி அடையும். இந்த பிராந்தியத்தின் குடிநீர், சாலை வசதி மேம்படுத்தப்படும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மக்கள் என்னை டெல்லிக்கு அனுப்பிவைத்தனர். இந்த 8 ஆண்டுகளில் மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. முந்தைய அரசுகள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இதனால் ஏழைகள், நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நலனையே அரசின் தலையாய கடமையாகக் கருதி செயல்படுகிறோம். குறிப்பாக ஏழைகள், பழங்குடி மக்களை முன்னேற்ற வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது.

பழங்குடி பகுதிகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். கல்வி நிலையங்கள் உருவாக்கப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவம், பொறியியல் படிப்புகளை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பழங்குடி மாணவ, மாணவியர் பயன்பெறுவர். இந்த சமுதாயத்தில் அதிக மருத்துவர்கள் வருவார்கள்.

எதிர்க்கட்சியினருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்குகிறேன். அவர்கள் பழங்குடி பகுதிகளை பார்வையிட்டு வளர்ச்சித் திட்டங்களில் ஏதாவது குறை இருந்தால் கண்டுபிடித்து கூறலாம். ஆட்சி அதிகாரத்துக்காக பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற உயரிய லட்சியத்துக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறோம். அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். இதன்காரணமாகவே அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜகவால் வெற்றி பெற முடிகிறது.

பழங்குடி மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர். தூய்மை, ஒழுக்கத்தை கண்டிப்புடன் கடைபிடிக்கின்றனர். மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்து வருகின்றனர். குஜராத்தில் சுமார் 37 பழங்குடி கிராமங்கள் இயற்கை வேளாண்மையில் முன்னோடிகளாக விளங்குகின்றன. பழங்குடிகளின் இந்த சாதனையை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே பாராட்டியிருக்கிறார். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.