மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட உணவுபொருட்கள் பதுக்கல் தொடர்பான நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கிவைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலுக்கு அமைவாக நேற்று காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இரண்டு வியாபார நிலையங்கள் உற்பட வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இனங்காணப்பட்ட அரிசி மூடைகளை உரிமையாளர்களின் விருப்பத்தின் பெயரில் பொதுமக்களுக்காக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சோற்று அரசியினை 220 ரூபாவிற்கும், சம்பா அரிசியினை 230 ரூபாவிற்கும், கிரி சம்பா அரிசியினை 260 ரூபாவிற்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு களுவாஞ்சிகுடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த அரிசி மூடைகள் அனைத்தும் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பதுக்கலில் ஈடுபடுகின்ற வியாபாரிகள் தொடர்பான தகவல்களை 077 011 0096 மற்றும் 065 222 8810 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மக்கள் தகவல்களை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.