மதுரை: மதுரை வைகை ஆறு யானைக்கல் தரைப்பாலத்தில் வாகனங்கள் இரவில் வெளிச்சம் இல்லாமல் ஆற்றில் கவிழ்வதை தடுக்கவும், சமூகவிரோத செயல்கள் நடப்பதை தடுக்கவும் மாநகராட்சியில் மின்னொளியில் யானைக்கல் தரைப்பாலத்தை ஜொலிக்க வைத்துள்ளது பார்ப்போரை கவர்ந்துள்ளது.
மதுரை வைகை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் முழுவதும் அகற்றப்பட்டு தற்போது அதற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யானைக்கல் மேம்பாலத்திற்கு கீழே தரைப்பாலம் இருப்பதால் இந்த தரைப்பாலம் மட்டும் தற்போதும் செயல்படுகிறது.
ஆற்றில் வெள்ளம் வரும்போது இந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் இந்த பாலத்தின் வழியாக மதுரையின் வடகரை மற்றும் தென் கரை பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த தரபை்பாலத்தின் அருகே அரசு கல்லூரி, ஏராளமான குடியிருப்புகள், செல்லூர் செல்லும் முக்கிய வைகை ஆறு சாலை மற்றும் மற்றொரு புறமும் முக்கிய வணிக மையமான சிம்மக்கல் இருப்பதால் இந்த தரைப்பாலம் நகரப் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாலமாக கருதப்படுகிறது.
இந்த தரைப்பாலத்தின் இரு புறமும் வைகை ஆறு செல்கிறது. பாலத்தில் இருந்து தடுமாறி விழுந்தால் ஆற்றிற்குள்தான் விழும் நிலை உள்ளது. வாகனங்களும் சற்று தடுமாறினாலும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இரவில் இந்த தரைப்பாலம் கும்மிருட்டில் மூழ்வதால் இந்தப் பகுதியில் ஏராளமான சமூக விரோத செயல்கள், திருட்டு வழிப்பறி நடக்கிறது. அதனால், தரைப்பாலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவும், வாகனங்கள் தடுமாறி ஆற்றில் கவிழ்வதை தடுக்கவும் இரவை பகலாக்கவும் இந்த தரைப்பாலத்தின் மேலே யானைக்கல் மேம்பாலத்தில் ஹைடெக் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனால், இரவு நேரத்தில் இந்த தரைப்பாலமும், யானைக்கல் மேம்பாலமும் வைகை ஆற்றின் பின்னணியில் ஜொலிப்போரை ஈர்க்கிறது.