அகமதாபாத்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், ராணுவத்தினர் போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர்.
குழந்தையை மீட்க உதவிய ராணுவ வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனிடையே காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு ஆம்புலன்ஸில் தனது கையில் சிகிச்சை தந்த ராணுவ வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்தப் படத்தில் குழந்தையின் உடல்நிலை சரியாக உள்ளதா என அந்த ராணுவ வீரர் பார்க்கிறார். குழந்தைக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்குவதாக அவரது செய்கை உள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் அவரைச் சுற்றிலும் மற்ற ராணுவ வீரர்கள் உள்ளனர். குழந்தையை காப்பாற்றிய பின்னர் குழந்தையைக் காக்க அவர் எடுத்த நடவடிக்கைக்கு சல்யூட் என்று கூறி சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “உணர்ச்சிகளும் கடமைகளும் கைகோர்க்கின்றன. இந்திய ராணுவத்துக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.
இந்தப் புகைப்படத்துக்கு ட்விட்டரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதை ரீ-ட்வீட்டும் செய் துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களுக்கு எங்களது மரியாதை கலந்த வணக்கம் என்றும், ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம் என்றும், போர்க்களத்தில் மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சையிலும் எங்களது ராணுவ வீரர்கள் சிறப்பானவர்கள் என்றும் பாராட்டுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.