மகாராஷ்டிரா
நாடு முழுவதும் காலியான ராஜ்யசபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக மூன்று வேட்பாளர்களையும், சிவசேனா இரண்டு வேட்பாளர்களையும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு வேட்பாளரையும் நிறுத்தி இருந்தன. தேர்தலின் போது எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதாக ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சியான பாஜக-வும் புகார் செய்தன. ஆளும் கட்சி தரப்பில் போடப்பட்ட 2 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் 3 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று கோரின.
அதோடு தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனிடம் கேட்டுக்கொண்டன. இதனால் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் 8 மணி நேரம் தாமதமாக வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தரப்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த தனஞ்சே மகாதிக் சிவசேனாவின் சஞ்சய் பவாரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளருக்கு எதிர்பாராத விதமாக 10 வாக்குகள் அதிகமாக கிடைத்தது. இது தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியின் இம்ரான், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பாஜக சார்பில் பியூஸ் கோயல், அனில் போண்டே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இத்தேர்தல் முடிவுகள் சிவசேனா கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. வரும் 20-ம் தேதி அம்மாநிலத்தில் சட்டமேலவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தேர்தலிலும் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ராஜ்ய சபை தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தும் கூட கட்சி மாறி பாஜக-வுக்கு வாக்களித்துள்ளனர் சிலர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அதிக அளவில் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
கர்நாடகா
கர்நாடகாவில் நடந்த ராஜ்ய சபை தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது. கர்நாடகாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மூன்று பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றனர். பாஜக தரப்பில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். ஜீ டிவி உரிமையாளர் சுபாஷ் சந்திரா பாஜக துணையோடு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஹரியானா
ஹரியானாவிலும் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வாக்குகள் எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. பல மணிநேர தாமதத்திற்கு பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் மகான் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் சார்பாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஓட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக துணையோடு சுயேச்சையாக போட்டியிட்ட கார்திகேய சர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடத்திலும் பாஜக-வே வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 57 ராஜ்ய சபை உறுப்பினர்கள் பதவி காலியானது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 இடங்கள் காலியானது. இதில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய இடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.