ராமேசுவரம்: இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ராமர் சேது பாலம் எப்படி, எப்போது, உருவானது என்பது குறித்து தேசிய கடல்சார் நிறுவனம் விரைவில் கடலுக்கடியில் ஆய்வு செய்ய உள்ளது.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் தீடைகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கையோடு தொடர்புள்ளவைகளாக இருப்பதினால் ராமர் பாலம், ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. தமிழில் சேது என்றால் பாலம் என்றும் அர்த்தம்.
இது ராமர் கட்டிய பாலம் என இந்து சமய மக்களால் நம்பப்படுகிறது. சேது சமுத்திர திட்டத்தால் இந்த மணல் தீடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ராமர் சேது பாலம் பகுதிக்கு சேதம் வராமல் சேது சமுத்திரம் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற பரிந்துரைத்தது. மேலும் இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்கு ஆகும்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆகிய இரண்டு அமைப்புகள் ராமர் சேது பாலத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில் மத்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அதற்கு ஒப்புதல் வழங்கியது.
தேசிய கடல்சார் நிறுவனம் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் தீடைகளில் இரண்டு முறை கள ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின் போது தீடைகளில் கடல் மட்டம் உயர்ந்து மணல் குவிந்திருந்திருந்தால் தேசிய கடல்சார் நிறுவனத்தினால் எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்நிலையில் மூன்றாவது கட்டமாக தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் தீடைகளில் விரைவில் துளையிட்டு மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தேசிய கடல்சார் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மணல் தீடை பகுதிகளில் கடல் மட்டம் குறைந்திருக்கும் காலங்களில் இந்த பணி தொடங்க தேசிய கடல்சார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.