வாக்குப்பதிவில் சிவசேனாவுக்கு ’ஷாக் ட்விஸ்ட் – சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக அமோக வெற்றி

மகாராஷ்டிரா மாநிலங்களவைத் தேர்தலில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகள் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா 2 வேட்பாளர்களையும், காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும், தேசியவாத காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியிருந்தது. ஆளும் கூட்டணிக்கு சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதுடன் மட்டுமல்லாமல், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் மகா விகாஸ் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்றும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.
image
சர்ச்சையும்… தாமதமும்…
இந்நிலையில், நேற்று பிற்பகல் தேர்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் தாங்கள் வாக்கு செலுத்திய சீட்டுகளை காண்பித்ததாக பாஜக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதேபோல, பாஜக உறுப்பினர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக மகா விகாஸ் கூட்டணி எம்எல்ஏக்களும் குற்றம்சாட்டினர். இந்த சர்ச்சையால் இந்திய தேர்தல் ஆணையம் பாதியிலேயே வாக்கெடுப்பை நிறுத்தியது.
பின்னர் வீடியோக்களை ஆய்வு செய்யப்பட்டன. இதில் சிவசேனா எம்எல்ஏ சுஹாஷ் காண்டே முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவரது ஓட்டு மட்டும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே சிவசேனா எம்எம்ஏக்கள் இருவர் சிறையில் உள்ள நிலையில், தற்போது மற்றொரு எம்எல்ஏவின் வாக்கும் செல்லாது என அறிவிக்கப்பட்டது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதனால் மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் 285 உறுப்பினர்களே வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரவு 8 மணிக்கு மேல் மீண்டும் தொடங்கிய வாக்கெடுப்பு நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. இதையடுத்து, அதிகாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
image
அதன்படி, பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அனில் போண்டே, தனஞ்செய் மாதிக் ஆகிய மூவருமே வெற்றி பெற்றனர். சிவசேனா சார்பில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களில் சஞ்சய் ரவுட் மட்டுமே வெற்றி பெற்றார். சஞ்சய் பவார் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நிறுத்திய தலா ஒரு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆளும் கூட்டணிக்கு அதிக பலம் இருந்த போதிலும், சுயேச்சை கட்சி மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க அக்கூட்டணி தவறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ 17 சுயேச்சை எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுத்ததே அது வெற்றி பெற காரணம் எனக் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.