குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, வரும் ஜூன் 15, அன்று பிற்பகல் 3 மணிக்கு புதுதில்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி அடுத்தகட்ட செயல்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று, மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
வலிமையான எதிர்க்கட்சியாக, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைப்பதற்கான முன்னெடுப்பாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அந்த கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.