நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்த குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். பீகாரைச் சேர்ந்த சிறுமி சௌமுகி குமாரி (Chaumukhi Kumari) 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் பிறந்தார். ஏற்கனவே பல்வேறு சமூகசேவைகள் செய்து வரும் நடிகர் சோனு சூட் இதுகுறித்து தகவல் அறிந்து அச்சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில் அச்சிறுமி குறித்த புகைப்படங்களை சோனு சூட் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்கு முன் நான்கு கால்களும் நான்கு கைகளும் கொண்ட சிறுமி சௌமுகியின் புகைப்படத்தையும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை படுக்கையில் சிறுமி ஓய்வெடுக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சோனு சூட்.
View this post on Instagram
A post shared by Sonu Sood (@sonu_sood)
“சௌமுகியுடனான எனது பயணம் வெற்றிகரமாக இருந்தது. சௌமுகி பீகாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்தார். வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவள் வீட்டிற்குச் செல்லத் தயாராகிவிட்டாள், ”என்று சோனு சூட் தனது சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM