சென்னை: தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும்.
12, 13-ம் தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.