Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு உண்மையானது? சளி பிடித்திருந்தால் வேறு என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில் தயாரித்த சூப்பை தவிர்க்கவும். காய்கறிகளை வேகவைத்து அரைத்து, கெட்டியான சூப்பாக குடிக்கலாம். எந்த உணவாக இருந்தாலும் நன்கு கொதிக்கவைத்தும், சூடாகவும் சாப்பிடுவது நல்லது.
சளி பிடித்திருக்கும் போது சிலருக்கு இருமலும் சேர்ந்துகொள்ளும். குறிப்பாக படுத்திருக்கும் நிலையில் அது தொண்டைப் பகுதியை மிகவும் எரிச்சலடையச் செய்யவும். வாய் வறண்டு, இருமல் அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலையில் இரவு தூங்கச் செல்வதற்கு முன் மஞ்சள்தூள், வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் குடிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.