Vikram: "தன்னுடைய சாவைத் தானே ஏமாற்றக்கூடிய ஒரு ஆள் – கமல் சார் சொன்ன ஒன்லைன்!"- லோகேஷ் கனகராஜ்

`விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

1. விக்ரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டோம். முதல் நாள் முதல் காட்சி மட்டும்தான் பார்த்தேன். பார்த்துட்டு நண்பர்களோட ஒரு மூணு நாள் அவுட்டிங் போயிட்டேன். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எதுவுமே ஓபன் பண்ணல. வந்து எல்லா கமெண்ட்ஸும் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

லோகேஷ் கனகராஜ்

2. விக்ரம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து உங்களையும், நெல்சனையும் கம்பேர் செய்கிறார்கள். கவனித்தீர்களா?

“எனக்கு இது நிஜமாவே கஷ்டமா இருக்கு. நெல்சன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். இப்போ நான் உங்ககிட்ட இப்படிப் பேசுறேனா, இதே என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட ஒரு மாதிரி இருப்பேன். அங்கயும் இது போல இருக்க மாட்டேன். ஆனா நெல்சன் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதான் இருப்பார். அதனாலதான் எல்லாரும் அவர ட்ரால் பண்றாங்களானு தெரில. நாளைக்கு எனக்கே கூட ஒரு பெரிய தோல்வி வரும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதைத் தாண்டினா எல்லாருக்கும் கஷ்டம்தான்.”

3. கமல் உங்களுக்கு லெக்சஸ் கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச். அது மட்டுமில்லாம துணை இயக்குநர்களுக்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறிங்க?

“ஷூட்டிங் கடைசி நாள் அப்போ, எல்லாருக்கும் கஷ்டமா இருந்துச்சு. இதுக்கப்றம் எப்ப இந்த நாள் வரும். எப்ப சாரை மீட் பண்ணுவோம். எப்ப சார் கூட வொர்க் பண்ணுவோம்னு யாருக்கும் தெரியாது. கமல் சாரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தோம். அதனால திருப்பி சாருக்கு எதாச்சும் பண்ணனும்ங்கற கடமை எங்க எல்லாருக்கும் இருந்துச்சு. புரொடியூசர் கமல் சாருக்கு நான் திருப்பி கொடுப்பதைத் தாண்டி, என் ஐடல் கமல் சாருக்குத் திருப்பி கொடுக்க நினைச்சது தான் இந்தப் படம். அதையேதான் இப்ப அவர் ரசிகர்களுக்கு பண்றாரு. இது எல்லாம் அவருக்குப் பெரிய வெற்றியே கிடையாது. இன்னும் பல வெற்றிகளை அவர் பார்க்கணும். இந்த வெற்றியே அவருக்கு ரொம்ப லேட்டா வந்திருக்கு.”

லோகேஷ் கனகராஜ் – கமல்

4. ஆரம்பத்தில் நீங்கள் ஒரு கதையைக் கமலுக்கு கொண்டு சென்றதாகவும், பின் அவர் ஒரு கதை சொல்லி, அதை நீங்கள் டெவலப் பண்ண கதைதான் ‘விக்ரம்’ என்று கூறுகிறார்களே?

“நான் இந்த கதையோட லேயர்களைதான் கமல் சார்கிட்ட சொன்னேன். சொல்லிட்டு, ‘நீங்க ஏதாச்சு பண்ணலாம்னு நினைக்கிறிங்களா?’ன்னு கேட்டேன். உடனே அவர் ‘தன்னுடைய சாவைத் தானே ஏமாற்றக்கூடிய ஒரு ஆள் இருந்தா எப்படி இருக்கும்? Search for the protagonist’ன்னு ஒரு ஒன்லைன் சொன்னாரு. உடனே நான் அவர்கிட்ட போய், ‘சார், இது பிரில்லியன்டா இருக்கு. எனக்கு இதைப் பண்ண டைம் மட்டும் வேணும்’ன்னு சொன்னேன். அப்படிதான் விக்ரம் வந்தது. அதுக்கப்பறம் ‘ஒரு யூனிவர்ஸ் மாதிரி கிரியேட் பண்ணலாமா சார்’ன்னு கேட்டேன். அதுக்கும் அவரு சரின்னுதான் சொன்னாரு. இப்போ அதை மக்களும் ஏத்துக்கிட்டாங்க. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU)-ன்னு பேரும் கொடுத்துட்டாங்க. இனிமே இதைத் தழுவி நான் எடுக்கும் படங்கள்ல இந்த பெயரைத்தான் நான் பயன்படுத்தப் போறேன்.

5. ‘மாநகரம்’ படத்தில் ஆசிட் அட்டாக், இதில் போதை பொருள் கடத்தல். இதன் மூலம் உங்கள் படங்கள் வாயிலாக சோசியல் மெசேஜ் கொடுக்க ட்ரை பண்றிங்களா?

“எடுக்குற கமர்சியல் படங்கள்ல எதாவது ஒரு பாயிண்ட்ல ‘நாம இத பத்தி சொல்லிட முடியுமா’ன்றதுதான் ஐடியாவே தவிர, சோசியல் மெசேஜ் சொல்லணும்னு படம் பண்ணல. அப்படி மெசேஜ் சொல்லணும்னா அதுக்கு இந்த மாதிரி படம் எடுக்க வேண்டிய அவசியமில்ல. தனியா வேற ஏதாச்சு படம் எடுத்துட்டு போயிடலாம். நான் இங்கே வந்ததே நல்ல எண்டர்டெயினரா இருக்கணும், நல்ல ப்லிம்மேக்கரா இருக்கணும்னுதான். ஒருவேளை பின்னாடி ஏதாவது மெச்சூரிட்டி வந்ததுக்கு அப்புறம் வேணா, அப்படிப் படம் பண்ணலாம்.”

லோகேஷ் கனகராஜ்

6. ‘விக்ரம்’ படத்தைத் தாங்கி நிற்கும் இன்னொரு பெரிய தூண் என்றால் அது இசை தான். அதைப் பற்றி…

“இன்னொரு பெரிய தூண் இல்ல. படத்தைத் தாங்கி நிக்கிற ஒரே பெரிய தூண் இசைதான். இத நான் சொல்லணுமேனு சொல்லல. அனிருத் உண்மையாலுமே ஒரு 60 மணி நேரம் தூங்கல. நாங்களாம் கூட எங்கயாச்சு நேரம் கிடைக்கும் போது தூங்குவோம். ஆனா அனிருத் கடைசி ரெக்கார்டிங் அப்போலாம் சுத்தமா தூங்கல. ஒவ்வொரு சின்ன சின்ன லேயரிலுமே கடைசி வரைக்கும் வேலை பார்த்தாரு.”

7. அடுத்து ‘விஜய் 67’-ல் ரோலக்ஸ் வருவதற்கு வாய்ப்பிருக்கா?

“‘மாஸ்டர்’ படத்தில் விஜய், விஜய் சேதுபதின்னு ரெண்டு ஸ்டார் இருப்பாங்க. விக்ரமும் அதே போல மல்டி ஸ்டார் படம்தான். அதே போல தளபதி 67-க்கும் நடந்தா நல்லாயிருக்கும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.