அயோத்தி: அயோத்தியில் இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்று ஈமச்சடங்கு செய்த மூன்று மகள்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அடுத்த மில்கிபூர் தெஹ்சில் பகுதியில் வசித்து வந்த அவத் ராஜ் திவாரி என்பவர் புற்றுநோய் பாதிப்பால், மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராஜ் திவாரி இறந்தார். அவரது உடல் நேற்று அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. ராஜ் திவாரியின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அதனால், இந்த தம்பதிகளின் மூன்று மகள்கள்தான் தங்களது தந்தைக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டியிருந்தது. சமூகத்தில் ஆண் வாரிசுதான் சடங்குகள் செய்ய வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் சிலர் கூறிய நிலையில், அதனை மறுத்து மூன்று மகள்களுமே தங்களது தந்தைக்கு ஈமச்சடங்கை நடத்தினர். முன்னதாக தந்தையின் உடலை தகனம் செய்வதற்காக, அவரை உடலை பாடையில் வைத்து தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். சுடுகாடு வரை சென்று, அவர்களே ஈமச்சடங்குகளையும் செய்தனர். இவர்களின் செயலை சிலர் விமர்சித்தாலும் கூட, பெரும்பாலனோர் வரவேற்றனர். மேலும் மகன்களுக்கு நிகரில்லை மகள்கள் என்பதை இந்த மூன்று மகள்களும் நிரூபித்துள்ளதாக உறவினர்கள் கூறினர். ராஜ் திவாரியின் மூன்று மகள்களில் இருவருக்கு திருமணமாகிவிட்டது; மூன்றாவது மகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.