சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்திருப்பதை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலர், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, குழு அமைப்பதில் முனைப்பு காட்டாமல், உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அவசரச் சட்டத்தை இயற்றி, ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்.
அதேபோல, தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். கள்ளத்தனமாக லாட்டரி விற்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், அதிமுக ஆட்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை இல்லாமல் இருந்தது. 2021-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். ஒருசில காவல் துறையினர், ஆளும் கட்சி நிர்வாகிகளின் உதவியின்றி ஒரு நம்பர் லாட்டரி விற்பனை சாத்தியமில்லை. இச்செயலில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. வேலைவாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையாலும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி, வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.
எனவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை இளைஞர்களும், பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதித்ததைப்போல, ஆன்லைன் சூதாட்டத்துக்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.
இதேபோல, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும், ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த அரசின் உத்தரவை வரவேற்றுள்ளார்.