உக்ரைன் ஆயுதப் படைகளுக்காகப் போரிட்ட முன்னாள் பிரித்தானிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிச் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் பிரிட்டிஷ் இராணுவத்தை விட்டு வெளியேறி உக்ரைனுக்குப் பயணம் செய்த ஜோர்டான் கேட்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஜோர்டான் கேட்லி “ஒரு ஹீரோ” என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் தீவிரமான சண்டையைக் கண்ட கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகரத்துக்கான போரில் அவர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,
“உக்ரைனில் இறந்த பிரித்தானிய நபரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக” வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேட்லியின் பணிகள் மிகவும் ஆபத்தானவை
ஜோர்டான் கேட்லியின் மரணம் தொடர்பில் அவரது தந்தை முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தனது மகன் உள்ளூர் படைகளுக்கு பயிற்சி அளிக்க உதவியதாக தெரிவித்துள்ளார்.
நகரத்தைப் பாதுகாக்கும் போது ஜோர்டான் முன் வரிசையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை அவர் இறந்ததாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்டான் கேட்லி “கவனமாக பரிசீலித்த பிறகு” உக்ரைனுக்கு உதவுவதற்காக சென்றதாக அவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
“ஜோர்டானும் அவரது குழுவினரும் தாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையைப் பற்றி பெருமிதம் கொண்டனர், மேலும் அவர்கள் செய்யும் பணிகள் ஆபத்தானவை, ஆனால் அவசியமானவை என்று அடிக்கடி என்னிடம் கூறினார்.
“அவர் தனது வேலையை நேசித்தார், நாங்கள் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்றும் “அவர் உண்மையிலேயே ஒரு ஹீரோ, எப்போதும் எம் இதயங்களில் இருப்பார் என்று ஜோர்டான் கேட்லியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கேட்லி ஒரு உண்மையான ஹீரோ
இதனிடையே, ஜோர்டான் கேட்லி ஒரு “உண்மையான ஹீரோ” என்று
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக் ட்வீட் செய்துள்ளார்.
“உக்ரைன் மற்றும் சுதந்திர உலகத்தைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்” என்று பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் கேட்லி பிரிட்டிஷ் இராணுவத்தில் எடின்பரோவை தளமாகக் கொண்ட மூன்றாவது பட்டாலியன் தி ரைஃபிள்ஸில் ஒரு துப்பாக்கி வீரராக பணியாற்றியதையும், உக்ரைனுக்குச் செல்வதற்கு முன்பு மார்ச் மாதம் படைகளில் இருந்து வெளியேறியதையும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.