ரஷ்யாவில் மன்னர் பீட்டர் தி கிரேட்டின் 350-வது பிறந்தநாளுக்காகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பீட்டர் தி கிரேட்1672 முதல் 1725 வரை ரஷ்யாவையும், பின்னர் ரஷ்யப் பேரரசையும் ஆண்டவர். பீட்டர் தி கிரேட் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இவரது இந்த கொள்கை ரஷ்யாவை 3 பில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐரோப்பாவின் முக்கிய வல்லரசாகவும், ரஷ்யப் பேரரசாகவும் மாற்றியது.
இந்த நிலையில், பீட்டர் தி கிரேட் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியைக் கடந்த வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய புதின், “பீட்டர் தி கிரேட் ஸ்வீடனுக்கு எதிராக 18-ம் நூற்றாண்டு போரின்போது பால்டிக் கடற்கரையைக் கைப்பற்றினார். ஆனால், அப்போது ஐரோப்பாவில் உள்ள எந்த நாடும் இந்த பிரதேசத்தை ரஷ்யாவிற்கு சொந்தமானது என்று அங்கீகரிக்கவில்லை. எல்லோரும் அதை ஸ்வீடனின் ஒரு பகுதியாகக் கருதினர். ஆனால், பழங்காலத்திலிருந்தே அந்தப் பகுதி மக்கள் ஸ்லாவ்கள் ஃபின்னோ-உக்ரிக் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தனர்.
எனவே, அதை மீண்டும் எடுத்து வலுப்படுத்துவது எங்கள் பொறுப்பு. ஆம், நமது நாட்டின் வரலாற்றில் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நேரங்கள் உள்ளன… ஆனால் நமது வலிமையை மீட்டெடுத்து நாம் முன்னேற வேண்டும்” என அதிபர் புதின் உக்ரைன் மீதான தன்னுடைய போர் நடவடிக்கைகளை… பீட்டர் தி கிரேட்டின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசினார்.