லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் பாஜக முன்னாள் செய்து தொடர்பாளர் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஜாவித் அஹமது என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜாவித் அஹமதுவின் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக அவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இன்று காலை 11 மணிக்குள் வீட்டை காலி செய்யவும் நோட்டீசில கூறப்பட்டு இருந்தது. இதற்கு அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். புல்டோசருடன் வந்த அதிகாரிகள் ஜாவித் அஹமதுவின் வீட்டை இடித்தனர். உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை புல்டோசர் மூலம் அரசு இடித்து வருகிறது. அந்த வகையில் வன்முறை தொடர்பாக கைதான ஜாவித் அஹமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது.