பிரயாக்ராஜ்: சமீபத்தில் பா.ஜ., எம்.பி.,க்கு எதிராக நடந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதற்கு காரணமாக இருந்த குற்றவாளிகளின் வீடுகளை உ.பி., அரசு புல்டோசர் மூலம் இன்று இடித்து தள்ளியது. லக்னோ,பிரயாக்ராஜ், ஷகாரான்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்டன.
பா.ஜ., எம்.பி.,க்கு எதிராக டில்லி, உ.பி., ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்தது. அதில், ஒரு சில இடங்களில் வன்முறையும் நிகழ்ந்தது. போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக, உ.பி.,யில் 9 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் ஏற்பட்ட கலவரத்தில், அம்மாவட்டத்தை சேர்ந்த ஜாவேத் முகமது என்பவர் மூளையாக செயல்பட்டதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜாவேத் முகமது வீட்டை புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும், வீட்டில் இருந்த பொருட்களை வாசலில் வைத்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கான்பூர், ஷகாரான்பூர், கான்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டது.
Advertisement