கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் களை கட்ட ஆரம்பித்துள்ளதால் ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான், திருமங்கலம், வாடிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை போக இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வாழை இலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
‘கரோனா’ ஊரடங்கு காலத்தில் வாழை இலைகளுக்கு தேவை குறைந்ததால் 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரையே விற்பனையானது. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் மற்ற காய்கறிகள் விவசாயத்துக்கு மாறினர். இவ்வாறு மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் 50 சதவீதத்துக்கும் மேலான வாழை விவசாயம் அழிந்து போனதால் தற்போது வாழை இலைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தற்போது உணவகங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன. அதனால் வாழை இலையின் தேவை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் இருந்து தற்போது வாழை இலைகள் வரவழைக்கப்படுகின்றன. தற்போது மதுரை ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறுகையில், ‘‘ஒரு கட்டு என்பது 250 இலைகள் கொண்டது. தற்போது தொடர்ச்சியான முகூர்த்த நாட்கள் காரணமாக திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. மேலும் கோயில் திருவிழாக்களும் கிராமங்களில் களைகட்ட ஆரம்பித்துள்ளன. அதனால், வாழை இலைகளின் தேவை அதிகரித்ததாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.