சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. எப்போதும் இல்லாத அளாவில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஒருவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த படம் பரிணாம வளர்ச்சியையும் குறிக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்காகவே எழுதப்பட்டதோ என்று நினைக்க வைக்கிற தமிழ் சினிமா பாடல் என்றால் அது,
“கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது” இந்த பாடல்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படிதான், இந்த படத்தில் நடுவில் உள்ள வெள்ளை நிறம் பார்ப்பதற்கு பளபளப்பாக ஜொலிப்பதாக இருக்கும். ஆனால், உண்மையில் அப்படி ஜொலிக்கவில்லை. நடுவில் வெள்ளை நிறம் பளபளப்புடன் ஜொலிப்பதைப் போல தெரிவதற்கு பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அகியோஷி கிடாவோகாவின் அசாஹி இல்யூஷன் படத்தில் நடுவில் வெள்ளை நிறம் ஜொலிப்பதாக பார்க்கலாம். ஆனால், உண்மையில், அப்படி எதுவும் ஜொலிக்கவில்லை.
இந்த படத்தில் நடுவில் வெள்ளை நிறத்தைச் சுற்றி மஞ்சள் கருப்பு என சாய்வான இதழ்களைப் பார்க்கலாம். ஆனால், முழுப் படமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், மையப் பகுதி வெள்ளை நிறப் பேக்ரவுண்ட்டை விட பிரகாசமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஃபிரான்டியர்ஸ் இன் ஹியூமன் நியூரோ சயின்ஸ் இதழ் வெளியிட்டுள்ள கருத்துப்படி, பல்வேறு வண்ணங்களின் மைய ஒளி வடிவங்கள் (எ.கா. பச்சை, மெஜந்தா மற்றும் வெள்ளை) ஒளியின் விரிவாக்கத்தை காட்டி நம் கண்களை ஏமாற்றுகிறது.
இதற்கு காரணம், நம்முடைய கண்கள் திடீர் பிரகாசமான ஒளியைத் தவிர்க்கும் வகையில் நமது மூளை வளர்ச்சியடைந்திருப்பதால் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“