கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இதனால், அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். அதேசமயம், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கு அம்மாநிலத்தில் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வாக்குமூலத்தை அடுத்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் மாநிலம் முழுவதும் கடந்த 5 நாட்களாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல் செய்தும், கருப்புக்கொடி காட்டியும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கருப்பு முக கவசம், கருப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக, “இந்த குற்றச்சாட்டுகள் என்னைப் பாதிக்கப்போவதில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எனது அரசு மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால் மக்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, ஆட்சியமைக்கும் அதிகாரத்தை எங்களுக்கு மீண்டும் வழங்கினர். நாங்கள் இப்போது மக்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியின் முன்பும் நாங்கள் சரணடைய மாட்டோம். குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் என்னை மிரட்ட முயற்சிக்க வேண்டாம். இதுபோன்ற முயற்சிகள் எந்த பலனையும் தரப்போவதில்லை. மக்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.