அமலாக்கப் பிரிவு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. அதில் சோனியா காந்தி ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படிகேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டாம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து விசாரணை தேதியை தள்ளி வைக்கும்படி சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் அந்த தேதியில் ஆஜராக முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து 13-ம் தேதி ராகுல் காந்தி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக இருக்கிறார். நேஷனல் ஹெரால்டு நியூஸ் பேப்பர் நிதி முறைகேடு தொடர்பாக இருவரிடமும் அமலாக்கப் பிரிவு விசாரிக்க முடிவு செய்திருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் சுப்ரமணியசுவாமி நேஷனல் ஹெரால்டு நியூஸ் பேப்பர் நிதி முறைகேடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி கோர்ட்டில் ஆஜராகவும் நிரந்தர விலக்கு கொடுத்துள்ளது.
இந்த நிலையில், சோனியா காந்தி திடீரென இன்று டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று தொடர்பான பிரச்னைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.