புதுடெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் இடைக்கால் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பால் அவரால் ஆஜராக முடியவில்லை. அதனால், கூடுதல் அவகாசம் கோரினார். அதன்படி, வரும் 23ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி நேற்று அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காங்கிரச் பொதுச் செயலாரும், தலைமை செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா தொற்று தொடர்பான பிரச்னை காரணமாக கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் சிகிச்சை பெறுவார்,’ என்று கூறியுள்ளார். முன்னதாக, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.