காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 10 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகள் உள்ளதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (75) கோவிட் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். மேலும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ரன்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவிட் தொடர்பான பாதிப்புகள் காரணமாக இன்று கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளதால், மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை பற்றி அக்கறைகொண்டுள்ள மற்றும் நலம் விரும்பும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சோனியா காந்திக்கு 10 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அப்போது, ரன்தீப் சுர்ஜிவாலா, சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகள் காணப்படுவதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சோனியா காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். மூக்கிலிருந்து ரத்தம் வந்ததற்கு சிகிச்சை பெற்ற பிறகு, அவரை கண்காணிப்பில் வைப்பதற்கு மருத்துவமனையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அவருடைய மகள் பிரியங்கா காந்தியும் மருத்துவமனைக்கு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவசர சிகிச்சைப் பிரிவு சில நிமிடங்களில் பரபரப்பானது. இதையடுத்து அவருடைய மகன் ராகுல் காந்தியும் மருத்துவமனைக்கு வந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கமாக இந்த மருத்துவமனையில் நெஞ்சக மருத்துவர் அருப் பாசுவிடம் சிகிச்சை பெறுவார். அவருக்கு இதற்கு முன்னர் ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளதால், கடந்த காலங்களில் நெஞ்சக நோய்த்தொற்று இருந்தது. அவர் பிப்ரவரி 2020 இல் வயிற்று பிரச்னை சிகிச்சைக்காகவும், பின்னர் ஜூலை மாதத்தில் வழக்கமான சோதனைகளுக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“