சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தும்போது பாடப்படும் பிரசித்தி பெற்ற ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ‘ஹரிவராசனம் நூற்றாண்டு விழா’ இலச்சினையை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பு பேசுகையில், “இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் நம்மை பற்றி பெருமிதத்துடன் கூறுகிறோம்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. தர்மம் என்பது எந்த மதம் சம்பந்தப்பட்டதும் அல்ல. புத்த மதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. அந்த சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது” என்று ஆளுநர் பேசினார்.
இந்நிலையில், சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது என்று, திமுக தரப்பில் இருந்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.