சென்னை: தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 37 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பணீந்தர ரெட்டி உள்துறை செயலாளராகவும் , உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், செந்தில்குமார் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதீனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு வணிக வரித்துறை கோவை பிரிவு இணை ஆணையராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த கோபால் சுந்தர்ராஜ் வணிக வரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி தீரஜ் குமார் , வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையராகவும், ஐஏஎஸ் அதிகாரி தரேஷ் அகமது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி நிர்மல்ராஜ்,போக்குவரத்துத் துறை ஆணையராகவும், ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: பிரதீப் குமார் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், சாந்தி ஐஏஎஸ் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், ஆகாஷ் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.