வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாது.ஓட்டுச் சீட்டு முறையே கடைப்பிடிக்கப்பட உள்ளது.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.அதே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராஜ்யசபா எம்.பி., தேர்தல், சட்ட மேலவைத் தேர்தல்களில், இந்த இயந்திரம் பயன்படுத்தப்படாது. இந்தத் தேர்தல்களில் ஓட்டுச் சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் வடிவமைப்பு. லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில், தாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளருக்கு மக்கள் ஓட்டு அளிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக எந்த வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கிறதோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகின்றார்.அதே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், வேட்பாளர்களுக்கு, விருப்பத்துக்கேற்ப முன்னுரிமை ஓட்டு அளிக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் நான்கு பேர் போட்டியிட்டால், அதில் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், முதலாவது விருப்பம், இரண்டாவது விருப்பம் என, ஓட்டுச்
சீட்டில் பதிவு செய்யப்படும்.அதன்படி, அதிக முதல் விருப்பம் பெற்ற வேட்பாளரே வென்றவராக அறிவிக்கப்படுவார்.அதனால் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராஜ்யசபா எம்.பி.,தேர்தல்களில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதில்லை.
கடந்த 2001ல் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்க சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் தான், அனைத்து தொகுதிகளிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
கடந்த, 2004ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதுவரை நான்கு லோக்சபா தேர்தல்கள் மற்றும் 127 சட்டசபை தேர்தல்களில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement